அதிசய திருமணம் மணமக்கள், அருள் தந்தை, ஆல்டர் பாய்ஸ், எல்லாமே இரட்டையர்கள்
இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டை சகோதரர்கள்- அருள் தந்தையும் இரட்டையராக அமைந்த சுவாரஸ்யம்
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அகில் தாமஸ்- நிகில் தாமஸ் என்ற இரட்டையர்கள், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த மேகி மேரி- மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளை திருமணம் செய்துகொண்டது சமூக ஊடகங்களில் வைரலானது.
கிறித்தவ முறைப்படி நடந்த அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார்களும் இரட்டையர்கள் தான்
பாதிரியார்களுக்கு உதவியாக இருந்த ‘ஆல்டர் பாய்ஸ்’ (Altar boys) என்ற சிறுவர்களும் இரட்டையர்கள் தான்
கேரளாவில் நடைபெற்ற ஒரு அரிய மற்றும் விசித்திரமான இரட்டைத் திருமணத்தில், இரட்டை சகோதரர்கள் இரட்டை சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமண விழாவில் அனைத்து முக்கியப் பணிகளையும் இரட்டைப் பிறவிகளே கவனித்தது இணையத்தில் வைரலானது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில், கடந்த ஜூலை 30 அன்று அகில் தாமஸ் – நிகில் தாமஸ் என்ற இரட்டைச் சகோதரர்கள், மேகி மேரி – மரியா மேரி என்ற இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத்தை நடத்திய பாதிரியார்களும், உதவியாக இருந்த சிறுவர்களும் (Altar boys) இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு திருமண நிகழ்வில் நான்கு ஜோடி இரட்டையர்கள் என்பது தற்செயலாக நடந்த ஒன்று அல்ல, இதற்காக நாங்கள் முன்பே திட்டமிட்டோம் என்கிறார் அகில் தாமஸ்.
எங்களுடையது காதல் திருமணம் அல்ல, பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது தான்” என்கிறார் இரட்டையர்களில் ஒருவரான நிகில் தாமஸ்.
சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த 32 வயதான அகில்- நிகில் ஆகிய இருவரும் வணிக கப்பல்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
“நிச்சயமாக இரட்டையர்களை தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக எங்கள் வீட்டில் எங்களுக்காக மணப்பெண்களை தேடி வந்தார்கள்” என்கிறார் நிகில் தாமஸ்.
எங்கள் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் இது மிகவும் பிடித்திருந்தது. கடவுள் இதை நிகழ்த்திக் காட்டினார். இரட்டையர்களின் திருமணத்தை நடத்தி வைத்தது மிகவும் சிறப்பானதாக இருந்தது. அது வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு நினைவுகளைத் தரும் ஓர் அனுபவமாக அமைந்தது.
இந்தத் திருமணத்தில் கலந்துகொண்ட விருந்தினர்கள் அனைவரும், இது ஒரு பெரிய வரலாற்று நிகழ்வு என்பதில் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.